Thursday, December 18, 2008

இன்னும் என்ன இருக்கிறது வாழ...

நடு இரவில் கலைகிறது உறக்கம் ...

துரோகம் கண்டு கண்டு கருகிப் போன என் இதயத்துக்கு இதம் தேடி அலைய எனக்கு விருப்பமில்லை...


கண்ணீர்த் துளிகளை கர்ப்பம் தாங்கிய விழிகளோடு சாய்ந்து கொள்ள , தோள்களை தொலைத்து விட்டு

தனியே நான் மட்டும்...

நீ இல்லாமல் என்ன மிஞ்சியிருக்கிறது என் எதிர்காலத்தில்...

பார்வையைத் தொலைத்து விட்ட எனக்கு பாலை வனமும் பசும் சோலையும் ஒன்று தானே ,

செவிடாகிப் போன பின் ஓலமும் மெல்லிசையும் பிரித்தறிய முடியா விஷயங்கள் தானே...

உதடுகளுக்குள் சிறை பட்டு வெளியாக மறுக்கும் வார்த்தைகள் ,

ஒரு வேளை நீ வந்தால் தான் விடுதலை பெறுமோ என்னவோ...


இவையெல்லாம் அறிவார் யாரோ ....


பிரிவென்னும் பூதம் தன்னிரு கைகளில் நம்மிருவரையும் இரு வேறு திசைகளில் தூக்கி எறிய,


ஏது செய்வோம் நாம் ???

நீ திரும்பி வரும்போது நான் உயிரோடு இருந்தால் நிச்சயம் சந்திப்போம்..





எழுத வேண்டும் இன்னமும்....

இன்னும் எழுதப் படாமல் எத்தனை எத்தனையோ எனக்குள்...


உன்னை சந்தித்த முதல் நொடி...


முதன் முதலாக நான் கண் கலங்கிய போது என்னை ஆறுதல் படுத்த ,


வார்த்தைகளுக்காக நீ தடுமாறித் தவித்த நொடிகள்...



உன்னோடு வாதிட்டுவிட்டு இரவெல்லாம் உறக்கத்தை விவாகரத்து செய்த நொடிகள்...


இப்படி எத்தனை எத்தனையோ ,

இன்னும் எழுதப் படாமல் என் மனதுக்குள் கருவாய்....

Monday, December 15, 2008

உறுதியாகச் சொல்கிறேன்...

அடிக்கடி...

மனது காயப் படும் போதெல்லாம்

அழையாத விருந்தாளியாய்

கண்ணீர் துளிகள்.....

ஹும்ம்...

இயல்பை தொலைத்து இயந்திரமாகி விட்ட உலகில்

குழந்தையின் சிரிப்பு கூட ,

பாலை வனத்தில் விழுந்த

பனித் துளியாய் ....

நினைவுகள்...


கவிதை...

தனிமையில் வெகு நேரம் யோசித்து

எதுவும் தோன்றாமல்

எழுது கோலை கவிழ்த்து, எழுந்த போது ,

தோன்றியது

கவிதை...

Friday, December 5, 2008

ஆதிக் கவிதை...


அன்னை

என்னை

அள்ளி

முத்தமிட்ட

தருணம்...

Monday, December 1, 2008

உணர்வதற்கு மட்டும்...

என் எண்ணங்கள்

பேனா மை வழியே

உதிர மறுத்த போதுதான்

உணர்ந்தேன் ,


அவை எழுதுவதற்கு அல்ல என்று ...

Friday, November 28, 2008

என் உயிர் காதலிக்கு ...

நதிக் கரையோரம் நாம் நடந்து வந்த பாதச் சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை...



அதற்குள் ஏனிந்தப் பிரிவு நமக்குள்...



நொடிப் பொழுதும் எனைப் பிரிய சம்மதிக்காதவளே எப்படியடி எனை நோகடித்து போனாய் ....

சிட்டாய் என் வாழ்வில் சிறகடித்தவளே ,

எனை சிதைத்ததுப் போனதேன் ....

மறந்து விடு என ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டுப் போனவளே ...


எதையடி மறப்பேன்..

விழி எனும் உளி கொண்டு எனை சிலை செதுக்கினாயே,


அதை மறக்கச் சொல்கிறாயா .....


என் கண்ணீர்த் துளிகளை புன்னகை பூக்களாய் மாற்றினாயே,


அதை மறக்கச் சொல்கிறாயா...


அஸ்தமன சூரியன் கூட உன் கன்னத்தின் சிவப்பில்லை என கவிதை எழுத வைத்தாயே ,


அதை மறக்கச் சொல்கிறாயா...


உன் புன்னகை கண்டால் நந்தவனத்து மலர்களெல்லாம் கர்வம் இழந்து போகும் எனக் கவி பாடித் திரிந்தேனே....


அதை மறக்கச் சொல்கிறாயா...


தென்றலில் கூட உன் வார்த்தையின் குளுமை இல்லை என தெவிட்ட தெவிட்ட சொன்னேனே ,


அதை மறக்கச் சொல்கிறாயா...


உன் விழியோரக் கண்ணீரை கண்டால் என் இதயத்தின் இரத்த ஓட்டமே நின்றுவிடுமென்று சத்தியம் செய்தேனே


அதை மறக்கச் சொல்கிறாயா...


உன்னை நினைத்தே எனை மறந்தேனே , அதை மறக்க சொல்கிறாயா...


உன்னோடு பேசும் நொடிகளெல்லாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நொடிகள் என்று பறை சாற்றினேனே ,


அதை மறக்கச் சொல்கிறாயா...


நீ கோபப்படுகின்ற நொடிகளில் கோடிக் கோடி அம்புகள் என் நெஞ்சை துளைக்கின்றன என தவித்தேனே ,

அதை மறக்கச் சொல்கிறாயா...


உன்னை நினைத்தே என் இரவுகளை எல்லாம் கண்ணீரில் நனைதேனே ,


அதை மறக்கச் சொல்கிறாயா...


உன்னை பற்றி எழுத காகிதம் போதவில்லை என வானைக் கோரினேனே,


அதை மறக்கச் சொல்கிறாயா...

உன் முனகல் கூட மெல்லிசை என மெத்தனம் கொண்டேனே,


அதை மறக்கச் சொல்கிறாயா...


உன்னை தவிர்த்து எனக்கு வேறு உலகில்லை என உறுதி கூறினேனே,


அதை மறக்கச் சொல்கிறாயா...


கடலலைகள் உன் கால் தழுவுகையில் குழந்தை போல் குதூகலித்தாயே ,


அதற்காகவே ஆயிரம் கவிதைகள் எழுதலாமென்று ஆவல் கொண்டேனே அதை மறக்கச் சொல்கிறாயா...


உன் விழியோர மை கொண்டு காவியம் பல எழுதலாம் என்று கனவு கண்டேனே அதை மறக்க சொல்கிறாயா...


உன் விரல் பிடித்து நடக்கையில் ஒன்பதாவது திசையை உணர்ந்தேன் என உவகை கொண்டேனே ,


அதை மறக்கச் சொல்கிறாயா...


நீ கண்ணிமைப்பதற்குள் வானத்து நட்சத்திரங்களை எல்லாம் அள்ளி வந்து உன் காலடியில் சமர்ப்பிப்பேன்

என ஆவல் கொண்டேனே,


அதை மறக்கச் சொல்கிறாயா...


என்றோ உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த மல்லிகையை புத்தக மத்தியில் பார்த்த போது சிலிர்த்தேனே ,


அதை மறக்கச் சொல்கிறாயா...


மரணம் கூட உன் மடியில் தான் என கண்ணீர் நிறைய கூறினாயே அதை ஏன் சொல்கிறாயா...


என் ரத்தத்தில் நிறைந்து சித்தத்தில் உறைந்தவளே ...

இப்படிக்கு,

உன்னை மறக்க முடியாமல் மரணித்து போகிறவனின் கடைசி கண்ணீர் துளிகள்....

Thursday, November 27, 2008

வெள்ளை காகிதம்...

வார்த்தைகளை விவாகரத்து

செய்து விட்ட கவிதையாய் ...

-வெள்ளை காகிதம்

அம்மாவாசை நிலவு ...

நிலவைக் காணாமல்

சோறுண்ண மறுக்கும்

குழந்தைக்கு எப்படி புரிய வைப்பாள்

அம்மா,

இன்று

அமாவாசை என்று...

இப்படிக்கு இல்லாதவள்...

நீ என்னை உதறிப் போன வினாடிகளிலேயே

நான் சிதறிப் போனேன் ...

திரும்பி வந்து தேடாதே ,

இல்லாத என்னை...

-இப்படிக்கு இல்லாதவள்...

பிரிவு...

நீ என்னை விட்டு விலகிப் போன

வினாடிகளில் தான் உணர்ந்தேன்...

திரும்பி போகக் கூட திசை

தெரியாத தொலைவிற்கு

உன்னோடு பயணித்து விட்டதை ...

நட்பு...

எங்கோ பிறந்து...
எங்கோ வளர்ந்து ...
உயிரினில் கரைந்து...
உணர்வினில் உறைந்த
உணர்விற்கு இப்படியும் பெயர் உண்டு ...

" நட்பு"....

கவிதை...

வார்த்தைகளுக்கு வர்ணம் தீட்டி ரசித்தேன்....

அது கவிதையாகி கண் சிமிட்டியது...

மனதுக்குள்....

அழகான அந்தி மாலை நேரம் ....

நொடிகொரு முறை கரைக்கு விஜயம் செய்து விட்டு போகும் அலைகள்...

நீலம் நிறைந்த கடல்....

கடலின் கடைசி நுனியில் கரைந்து கொண்டிருக்கும் செந்நிற சூரியன்....

மனது நிறைந்த கவிதை....

தோள் சாய்ந்து தலை அசைக்க நீ....

அணைந்து போகும் என் உணர்வுகளை உயிர்ப்பிக்க உன் பார்வை கீற்று...

போதும் ,

இந்த ஜென்மத்தில் இது போதும்....

ஏதோ பிறவிப் பயனை அடைந்து விட்ட சிலிர்ப்பு

மனதுக்குள்....

நொடிகள் ...

ஒரு சிறு புன்னகை கூட

நம்மிடையே

ஒரு மிகப்பெரிய இடைவெளியை

உண்டாக்கிவிடலாம்...

எனவே,

சிரிப்பதைக்கூட சீக்கிரமாய் முடித்துக்கொள்...

இன்னும் ஏக்கத்தோடு ...

மழை பெய்து

கொண்டிருந்த ஒரு மாலை வேளையில்

எதிர்பாராத வினாடியில் உன் சந்திப்பு...

மனதுக்குள் ஒரு பனி ஊர்வலம் ....

நீ பேசுவாய் என நானும்,

நான் பேசுவேன் என நீயும்,

மௌனத்தில் கரைந்தன நொடிகள் ...

ஒரு வழியாய் வார்த்தைகளை சேகரித்து கொண்டு நிமிர்ந்தேன்.....

உன் பார்வை பட்டு சிதறின வார்த்தைகள் ....

மீண்டும் தொடர்ந்தது மௌன தேவதையின் ஆட்சி....

பொறுமை இழந்து மழையும் விடை பெற்று சென்று விட்டது....

விழியசைவில் விடை பெற்று கொண்டு

எதிர் திசையில் இயங்கின கால்கள்...

வழக்கம் போல் உனக்கான வார்த்தைகள் என்னோடும்

என் மனது உன்னோடுமாய் .......






Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads